india
அமைதியாக சாதித்த அமிதா…விஸ்வரூப வெற்றி கொடுத்த விடாமுயற்சி!…
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்பதன் படி கல்விக்கு முடிவே கிடையாது. ஆனால் அதனை படிக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே முடிவு இருந்து வருகிறது. இதுவே உலகம் ஒத்துக்கொள்ளும் உண்மையாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தான் நினைத்து படிப்பை படித்தே தீர வேண்டும் என்ற தீர்மானத்தோடு சாதித்து காட்டியவர்கள் ஏராளமானவர்கள் இருந்து வருகின்றனர்.
வறுமை துரத்தினாலும் , குடும்பச்சூழ்நிலை முன்னேறவிடாமல் பின்னுக்குத் தள்ளினாலும் தங்களின் தொடர் முயற்சியாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைந்து பெருமைப் பட்டவர்கள் பலரையும் பார்த்து வருகிறது இந்த பூமி. குடும்ப சூழ்நிலை தான் நினைத்ததை அடைய விடாமல் தடுப்பனை போட்டே வந்தாலும், அதனை எல்லாம் துச்சமாக துடைத்தெறிந்து சாதித்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த மாணவி அமிதா பிரஜபதி.
அமிதாவின் தந்தை டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களது குடும்பம் குடிசையிலே வசித்து வருகிறது. பட்டய கணக்காளர் (CA) படித்து விட வேண்டும், தனது குடும்ப வறுமையையும் தாண்டி சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து தனது படிப்பில் கவனத்தை செலுத்தி வந்திருக்கிறார் அமிதா பிரஜபதி.
தேர்வில் வெற்றி பெற்ற அமிதா பிரஜபதி ஆனந்தக் கண்ணீரோடு தனது கட்டித்தழுவி தனது மகிழ்வை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் என் வாழ்க்கையில் முதல்முறையாக என அப்பாவை கட்டியணைக்கிறேன், என் கனவு நிறைவேறி விட்டது. இப்போது நிம்மதியாக உள்ளது என பதிவிட்டுள்ளார் அமிதா பிரஜபதி. வறுமையை வென்று சாதனை படைத்துள்ள அமிதாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.