latest news
திமுகவின் மாம்பழ… பட்டாசு – விக்கிரவாண்டி கொண்டாட்ட காட்சிகள்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்தார். 20 சுற்றுகள் முடிவில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் திமுகவின் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், கோவை மாவட்ட பொள்ளாச்சியில் திமுகவினர் எதிர்க்கட்சி பாமகவின் சின்னமான மாம்பழத்தைப் பிழிந்து கொண்டாடினர்.
அதேபோல், தங்கள் கட்சி டெபாசிட் பெற்றதை விக்கிரவாண்டியில் பாமகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். திமுக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்றதாகவும், தங்கள் கட்சியினர் ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் 56,000 வாக்குகளுக்கும் மேல் பெற்றிருப்பதாக பாமக தொண்டர்கள் தெரிவித்தனர்.