india
வேட்டி பஞ்சாயத்து… பெங்களூரு மால் மீது கடும் நடவடிக்கை!
வேட்டி உடுத்தியிருந்த விவசாயியை அனுமதிக்காத பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
பெங்களூரு மகடி ரோடு பகுதியில் ஜிடி மால் என்கிற பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள தியேட்டர் ஒன்றில் தனது மகன் நாகராஜூடன் படம் பார்ப்பதற்காக 70 வயதான ஃபகீரப்பா என்பவர் சென்றிருக்கிறார். ஆனால், அவர் வேட்டி உடுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டி, வணிக வளாக விதிமுறைகளின்படி உள்ளே அனுமதிக்க பாதுகாவலர்கள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வணிக வளாகத்துக்கு வெளியே கன்னட மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டி மற்றும் லுங்கி அணிந்தபடி வணிக வளாகத்துக்குள் சென்றும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
வணிக வளாக சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கர்நாடக சட்டப்பேரவையில் எழுப்பின. இந்த விவாகரம் தொடர்பாக பேரவையில் பேசிய அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும் அந்த வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட உத்தரவிட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.