latest news
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல்?…விசாரணையை தீவிரப்படுத்தும் காவல் துறை…
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தின் மீது காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து தீவிர புலனாய்வு நடந்து வருகிறது.
சென்னையில் வைத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொலையில் தொடர்புடையதாக சிலர் சரணடைந்தனர். அதில் விசாரணைக்கு கூட்டிச் செல்லும் போது காவல் துறையினரின் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடம் என்பவரை காவல் துறையினர் அன்மையில் என்கவுண்டர் செய்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக புதிதாக மூன்று நபர்கள் மீது காவல் துறையினரின் கவனம் சென்றுள்ளது.
அதிமுகவில் அங்கம் வகித்து வந்த மலர்க்கொடி என்ற பெண் உட்பட மூன்று நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிலிருந்து மலர்க்கொடியை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயளார் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இவரைத் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரிஹரன், திமுகவின் நிர்வாகியின் மகனான சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பின்னணியில் இருப்பவர்கள் யார், எதன் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டது, இந்த கொலை சம்பவத்தில் அரசியல் பின்னணிகள் ஏதும் இருக்கிறதா? என்பதை வெளிக்கொண்டு வர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.