latest news
ஏன்பா நீங்க கரெக்டா இருக்கீங்களா… செய்தியாளர்களிடம் கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது.
பிரபல தொழிலதிபரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான சேகர் ரெட்டியின் தந்தை சமீபத்தில் மறைந்தார். இவர் அதிமுகவில் முன்னணி தலைவர்களோடு நெருக்கமானவர். சேகர் ரெட்டியின் தந்தை மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவரின் வீட்டுக்கு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இன்று வேலூர் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டுக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதுபற்றி கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டதாகக் கூறினார். அதேபோல், பிஜேபி உங்களுக்கு வலை விரித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று ஒரு வரியில் பதிலளித்துவிட்டு காரில் கிளம்ப எத்தனித்தவரிடம், `ஏன் சார் பிரஸை பார்த்து பயப்படுறீங்க’ என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி, `நீங்க எல்லாம் ஒழுங்கா இருக்கீங்களா… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி நியூஸை ஒழுங்கா கவர் பண்றீங்களா… ஆளுங்கட்சிக்கு சாதகமா ஜால்ராதானே அடிக்குறீங்க என்று பதிலளித்தார்.