latest news
எப்புர்ரா… 3 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன விநாயகர் சிலை… மீண்டும் அதே இடத்தில்… வியப்பில் பொதுமக்கள்…!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விநாயகர் சிலை திரும்பி இருந்ததை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பொதுவாக சாமி சிலைகள் திருடப்படுவது வழக்கம்தான். அதிலும் விநாயகர் சிலை என்றால் அது அடிக்கடி காணாமல் போகும். பல கிராமங்களில் திருடிக் கொண்டு வரும் சிலைகளை வைத்து தான் சாமி கும்பிடுவார்கள், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கின்றது, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி பகுதியில் அவலூர் பேட்டைக்கு செல்லும் வழியில் அருந்ததியர் பாளையத்தில் ஒரு குளம் இருக்கின்றது.
அதில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு விநாயகர் சிலையை வைத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து விநாயகர் சிலையை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். அதன் பிறகு ஊரார்கள் பல இடங்களில் தேடியும் விநாயகர் சிலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று சிலை காணாமல் போன இடத்தில் மீண்டும் அந்த சிலை இருந்தது. சிலையை திருடி சென்றவர்களே மீண்டும் கொண்டு வந்து வைத்து சென்று விட்டனர். திருடி சென்ற விநாயகர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பலரும் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் மூன்று வருடங்களுக்கு கழித்து விநாயகர் சிலை திரும்ப கிடைக்கப்பட்டுள்ளதால் அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.