latest news
இனி சில்லறைக்கு கவலையே இல்லை… அரசு பஸ்களில் 100 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனை!..
அரசு பஸ்களில் பொதுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே சில்லறை தான். தற்போது எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி இருக்கும் நிலையில் அரசு பஸ் பயணத்திற்கு என்று காசை கையில் வைக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.
இந்நிலையில், தான் அரசு பஸ்களில் பயணிக்க யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் டிக்கெட் எடுக்கும் முறையை மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. தற்போது 100 சதவீதம் அரசு பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி அமலுக்கு வந்து இருக்கிறது.
இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு, விரைவு மற்றும் ஏசி பஸ்கள் உள்ளிட்டவை 1100க்கும் அதிகமாக இயக்கப்படுகிறது. அதிநவீன டிக்கெட் கருவிகள் மூலம் பணிமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டில் இருக்கிறது. இதனால் பயணிகளுக்கு சில்லறை, ஏடிஎம் செல்ல வேண்டும் என்ற எந்த கவலையும் இல்லை.
அதுப்போல, நடத்துனரும் கணக்கு போட்டு டிக்கெட் கிழிக்கும் வேலையை செய்ய வேண்டாம். ஊரை குறிப்பிட்டால் பயண தேதி, கட்டணம் உள்ளிட்டவை அடங்கும் டிக்கெட்டை கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இது வெளியூர் பயணங்களில் முற்றிலும் அமலுக்கு வரும் நிலையில் அடுத்த கட்டமாக மாநகர பேருந்துகளிலும் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.