Cricket
உங்க டீம் அம்பயரை கூட்டிட்டு வாங்க!.. வங்கதேச கேப்டனை கலாய்த்த ஹர்மன்பிரீத் கவுர்!..
இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் அவுட் ஆனதில் கோபமுற்று ஸ்டம்ப்களை அடித்து, அதன் பிறகு வெளியேறினார். இதோடு போட்டிகளில் நியாமாக செயல்படும் அம்பயர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
போட்டியின் போது நடைபெற்ற சலசலப்பு போதவில்லை என்ற வகையில், போட்டிக்கு பிறகு நடைபெற்ற போட்டோஷூட்-இல் ஹர்மன்பிரீத் கவுர் வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானாவை கிண்டல் அடிக்கும் தோரணையில் எதையோ கூறுவதும், உடனே கோபமுற்ற நிகர் சுல்தானா, தனது அணியை நேரடியாக டிரெசிங் ரூமிற்கு அழைத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் போது ஹர்மன்பிரீத் கவுர், குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்ள உங்க அணியின் அம்பயர்களையும் அழைத்து வாருங்கள் என்று நிகர் சுல்தானாவிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்டு எரிச்சல் அடைந்த நிகர் சுல்தானா, கோபத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல், தனது அணியை நேரடியாக டிரெசிங் ரூமிற்குள் அழைத்து சென்றார் என்று கூறப்பட்டது.
போட்டிக்கு பிந்தைய போட்டோஷூட்-இன் போது நடந்த சம்பவம் பற்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் நிகர் சுல்தானாவை கேலி செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இருவரும் அம்பயர் பற்றி ஏதோ பேசிக் கொண்டனர், ஆனால் வங்கதேச கேப்டன் அல்லது அணி பற்றி கேலியாக எதுவும் பேசவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுகுறித்து ஸ்மிருதி மந்தனா கூறியதாவது..,
“நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் தான் இதை சொன்னீர்கள். வங்கதேச கேப்டனிடம் அவர் எதையும் கூறியதாக எனக்கு தெரியவில்லை. நான் கேட்டதில் இருந்து, அவர் அம்பயரிங் பற்றி எதையோ கூறினார். அவர் அவர்களை பற்றி எதையும் கூறியதாக எனக்கு தெரியவில்லை. போட்டியின் நடக்காதவை குறித்து நாம் எதையும் பேசக்கூடாது. போட்டிக்கு பிறகு கேமரா இல்லை. அது போட்டிக்கு பின் நடைபெற்ற சம்பவம், இதனால் அதைபற்றி நாம் எதையும் பேச வேண்டாம்,” என்று தெரிவித்தார்.
போட்டியின் போது ஸ்டம்ப்களை அடித்தமைக்காக, ஹர்மன்பிரீத் கவுர் கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.