Cricket
வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…
இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் நின்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் தடை ஏதுமின்றி இன்று முழுமையாக நடந்து முடிந்தது.
நூற்றி ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர் பங்களாதேஷ் அணியினர்.
இருநூற்றி முப்பத்து மூன்று ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டுவண்டி – டுவண்டி போட்டியில் வளையாடுவதைப் போல அதிரடியாக ஆடினர்.
முப்பத்தி நான்கு புள்ளி நான்கு ஓவர்களில் இரு நூற்றி என்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி எழுபத்தி இரண்டு ரன்களை குவித்தார். ராகுல் அறுபத்தி எட்டு ரன்களும், விராட் கோலி நாற்பத்தி ஏழு ரன்களும் எடுத்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேச அணி இருபத்தி ஆறு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியை டிராவாக்க வங்கதேச அணி கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருபத்தி ஆறு ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நேரத்தில் போட்டியை வென்று வங்கதேச அணியை வாஷ்-அவுட் செய்யும் முனைப்பினை இந்திய அணி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.