Cricket
ஸர்பிரைஸ் கொடுத்த சர்பராஸ் கான்!…இன்னிங்ஸ் லீடு எடுக்க இந்தியா கடும் போராட்டம்?…
நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் உதை வாங்கியது இந்திய அணி. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்திலேயே மிகக் குறைவான ஸ்கோரில் ஆல்-அவுட் ஆன போட்டிகளில் ஒன்று இந்த முதல் இன்னிங்ஸ் என்ற மிக மோசமான விளையாட்டினை அரங்கேற்றியிருந்தனர் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள்.
மூன்றாவது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா என்ற கேள்வி தான் பிரதானமான ஒன்றாக இருந்தது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் மனதில்.நானூற்றி இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு பிறகு. நிதானமான துவக்கத்தை கொடுத்தனர் இந்திய ஓப்பனர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால். எழுபத்தி இரண்டு ரன்களை முதல் விக்கெட் பார்ட்னஷிப்பாக எடுத்திருந்த நேரத்தில் முப்பத்தி ஐந்து ரன்களை எடுத்திருந்த ஜெய்ஷ்வால் அஜாஷ் பட்டேல் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியின் சாதூர்யமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை தலை தூக்க துவங்கியது.
அதே நேரத்தில் அரை சதத்தினை கடந்திருந்த ரோஹித் சர்மா அஜாஷ் பட்டேலின் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
விராத் கோலியுடன் இணைந்தார் சர்பராஸ் கான், டெஸ்ட் போட்டியா? அல்லது இது ஒரு நாள் போட்டியா? என்ற சந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக தனது துணிச்சலான அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிக்கச் செய்து ஸ்ர்பிரைஸ் கொடுத்தார்.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் சர்பராஸ் கான் எழுபத்தி எட்டு பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் எழுபது ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். சர்பராஸ் கானின் அதிரடி ஆட்டதிற்கு கம்பெனி கொடுத்து ஆடி வந்த விராத் கோலி எழுபது ரன்களை எடுத்திருந்த நேரத்தில் க்ளென் பிலிப்ஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
நியூஸிலாந்து தரப்பில் அஜாஷ் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், க்ளென் பிலிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருக்கிறார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா நியூஸிலாந்தை விட நூற்றி இருபத்தி ஐந்து ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
ராகுல், ரிஷப் பன்ட், வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்த ஆல்-ரவுண்டர் அஷ்வின், மற்றுமொரு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் ஆட காத்திருப்பதால் இந்திய இரண்டாவது இன்னிங்ஸில் லீடு எடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் முழுவதுமாக பேட்டிங் செய்து நல்ல லீடிங் கிடைத்து இந்திய அணி டிக்ளேர் செய்யும் என்பது இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.