india
ஆசிய கோப்பை தொடர்…அசால்ட்டு பண்ணிய இந்திய ஆக்கி அணி!…பாகிஸ்தானை பதம் பார்த்தது!…
சமீபத்தில் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் சீனாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்திய ஆடவர் ஆக்கி அணி.
சீனா ஹூலுன்பியர் நகரில் எட்டாவது ஆசிய சாம்பன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடந்து வருகிறது. ஆறு அணிகள் பங்கற்று வரும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் இதர ஐந்து அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் பம்பரம் போல களத்தில் சுழன்று தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினர்.
போட்டியின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு – ஒன்று ( 2 – 1 ) என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது.
லீக் சுற்றில் இதற்கு முன்னர் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், தென் கொரியா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு முன்னர், தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே அரை இறுதிப் போட்டிக்கு தகுதி அடைந்து விட்டது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில் கூட இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.