latest news
இரிடிய கலசம்; கோடிக்கணக்கில் லாபம் – சதுரங்க வேட்டையை மிஞ்சிய மதுரை மோசடி!
இரிடிய கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறி மதுரை வியாபாரியிடம் 18 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அதேபகுதியில் வசித்து வந்த கலைச்செல்வி என்பவர், சமீபத்தில் தெய்வேந்திரனுக்கு தொழில்ரீதியாக அறிமுகமாகியிருக்கிறார். தொழில் தொடர்பாக தெய்வேந்திரனுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் கூறிவந்த கலைச்செல்வி, ஒரு கட்டத்தில் இரிடிய கலசத்தில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்று ஆசை காட்டியிருக்கிறார்.
ஆரம்பத்தில் கலைச்செல்வி சொல்வதை தெய்வேந்திரன் நம்பவில்லையாம். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி என்று முகமது ரஃபீக் என்பவரை கலைச்செல்வி தெய்வேந்திரனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். தெய்வேந்திரனிடம் போனில் பேசி இரிடிய கலசம் பற்றி சொல்லி அவரை நம்பவும் வைத்திருக்கிறார் ரஃபீக்.
இதையடுத்து மதுரை வந்த ரஃபீக்கை நேரில் சந்தித்ததோடு முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பணமும், இரண்டாம் கட்டமாக 2 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கிலும் கொடுத்திருக்கிறார். மேலும், இரிடிய கலசம் டீல் தொடர்பாக சென்னையில் மீட்டிங் இருப்பதாக தெய்வேந்திரனை அழைத்துச் சென்று, நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்ததோடு ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இவரைப் போலவே மேலும் சிலர் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. சிறிது நாட்களில் மும்பை செல்ல வேண்டும் என்று தெய்வேந்திரனிடம் சொன்னதோடு கொஞ்சம் கொஞ்சமாக ரூ.18 லட்சம் வரையில் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்காத நிலையில் கொடுத்த பணத்தை தெய்வேந்திரன், கலைச்செல்வி, ரஃபீக் ஆகியோரிடம் திரும்பக் கேட்டபோதுதான், தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, போலீஸில் அவர் கொடுத்த புகாரின் பேரில் கலைச்செல்வி மற்றும் ரஃபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மோசடியில் மேலும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் போலீஸார் விசாரணை வளையத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.