india
மோடி மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?…கனிமொழி எம்.பி.சராமரி கேள்வி…
தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் நாற்பத்தி ஐந்து கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பதினைந்து பள்ளிகளில் மட்டுமே தமிழ் மொழி பாடமாக உள்ளது என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இருபது மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளி முதல்வரிடம் தமிழ் பாடம் வேண்டும் என கோரிக்கை வைத்தால் தான் தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட்டு கேந்திர வித்யாலயாவில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழியை கற்க தமிழ் நாட்டிலேயே இந்த நிலைமை இருந்து வருகிறது எனவும் கனி மொழி ஆவேசமடைந்தார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த போது மக்கள் உரிமைகளுக்காக போராடிய மோடி, இப்போது பிரதமரான பிறகு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பவராக இருந்து வருகிறார் என்றும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ் நாட்டிற்கான நிதி தரப்படும் என்றால் நீங்கள் மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா?, முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுக்க வில்லையா? என கேள்வி எழுப்பினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை மும்மொழி புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வருவதாக கனிமொழி சொன்னார். அதே போல உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் மொழிப்போராட்டத்திற்காக நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தது போல வேறெங்காவது உண்டா என கொதித்தெழுந்தார்.
தமிழ் நாட்டில் ஹிந்தியை திணித்து வருவதோடு மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்தையும் சேர்த்து திணித்து வருவதாகவும் கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசும் போது குற்றம் சாட்டினார். மக்களின் உரிமைகளில் தலையிட ஒன்றிய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது எனவும் ஆவேசமடைந்தார்.