india
நெகட்டிவ் கமெண்ட்ஸ்; சோசியல் மீடியா ட்ரோல் – விபரீத முடிவெடுத்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்!
இன்ஸ்டாகிராம் ட்ரோலால் மனமுடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் விபரீத முடிவெடுத்திருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திர்க்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கிவந்த அவருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
இவர் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த இளைஞர் இந்த இளம் பெண்ணின் இன்ஸ்டா போஸ்ட்களில் நெகட்டிவாக கமெண்டுகள் இட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதைப்பார்த்த இவரது மற்ற சில ஃபாலோயர்ஸும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களைத் தட்ட, அதைப் பார்த்து மனமுடைந்த நிலையிலேயே இருந்திருக்கிறார் அந்த இளம் பெண். இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அவரை மீட்ட பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.