Cricket
ஓய்வு முடிவை மாற்றிக் கொண்ட மனோஜ் திவாரி.. என்ன பிளான் தெரியுமா?
மனோஜ் திவாரி தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரண் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், மனோஜ் திவாரி தனது முடிவை மாற்றிக் கொண்டு, மீண்டும் முயற்சிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். அதன்படி ரஞ்சி கோப்பையில் விளையாட மனோஜ் திவாரி திட்டமிட்டுள்ளார்.
1989-90-யில் ரஞ்சி கோப்பையை வென்ற வங்காள அணி அதன்பிறகு இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனினும், கடந்த மூன்று சீசன்களில் இரண்டு முறை அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் திவாரி தலைமையிலான வங்காள அணி கடந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது. எனினும், சௌராஷ்டிரா அணி ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காள அணியை வீழ்த்தியது.
“வங்காள அணிக்கு கடந்த முறை தலைமை வகித்தது எனக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும். விடைபெறும் முன்பு மற்றொரு முறை முயற்சி செய்ய விரும்புகிறேன். அடுத்த ஆண்டு யு-டர்ன் என்ற பேச்சுக்கே இடமில்லை. வங்காள கிரிக்கெட்டில் மற்றொரு ஆண்டு விளையாட விரும்புகிறேன்.”
“என் மனைவி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்தார். உடற்பயிற்சி கூடத்தில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்த அவர் என்னை கடுமையாக திட்டித் தீர்த்தார். டாடாவும் மீண்டும் கிரிக்கெட் விளையாட என்னை வற்புறுத்தினார். ஓய்வு அறிவிப்பில் இருந்து வெளியேறுகிறேன். வங்காள கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. கடைசியாக ஒருமுறை முயற்சிக்க விரும்புகிறேன், அது வீரராக இருந்தாலும் சரி, கேப்டனாக இருந்தாலும் சரி,” என்று 37 வயதான மனோஜ் திவாரி தெரிவித்து இருக்கிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடக்க மனோஜ் திவாரி இன்னும் 92 ரன்களே அடிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட்டில் இவரது சராசரி 48.56 ஆகும். இதில் 29 சதங்கள் அடங்கும். கடந்த 19 ஆண்டுகளாக இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2004 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மனோஜ் திவாரி அறிமுகமானார்.