india
தேர்தல் முடிவுகளில் தலையீடா… மும்பை வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை… என்ன நடந்தது?
மும்பை வடமேற்குத் தொகுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளராகக் களமிறங்கிய ரவீந்திர வைக்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மும்பை வடமேற்குத் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தத் தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைக்கரின் உறவினர் ஒருவர், வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் போனைப் பயன்படுத்தியதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, இந்த பொய் செய்தியைப் பரப்பியவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கூறிய மும்பை வடமேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனா சூர்யவன்ஷி, ப்ளூடூத், இன்டர்நெட் என எந்தவொரு இணைப்பும் இல்லாமல் தனியாக இயங்கக் கூடியது வாக்குப்பதிவு இயந்திரம் என்று விளக்கம் அளித்திருந்தார்.