latest news
தன்மானம் இல்லையா?!.. பாஜக-விலிருந்து விலகுங்கள்!.. தமிழிசைக்கு எழும் ஆதரவு!..
தமிழகத்தில் முன்பெல்லாம் காங்கிரஸில்தான் கோஷ்டி பூசல் இருந்தது. இப்போது பாஜகவிலும் இது அதிகரித்துவிட்டது. தற்போதுள்ள தமிழக பாஜகவில் அண்ணாமலை டீம், அண்ணாமலை இல்லாதவர்கள் டீம் என இரண்டு அணி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை தமிழிசை சவுந்தர்ராஜன் போன்ற பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்தவர். தமிழத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என ஓயாமல் சொல்லி வந்தவர். ஆனால், அவரை அந்த பதவியிலிருந்து பாஜக தூக்கியது. அதன்பின் அவரை தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஆளுனராக நியமித்தது.
சில வருடங்கள் ஆளுனராக பணிபுரிந்த தமிழிசை அந்த பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஏனெனில் அவருக்கு தமிழக அரசியலில்தான் ஆர்வம் அதிகம். பாராளுமன்ற தேர்தலின் முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ‘அண்ணாமலையின் செயல்பாட்டில்தான் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்’ என சொன்னார்.
இதனால் கோபமடைந்த அண்ணாமலையின் விசுவாசிகள் டிவிட்டர் வார் ரூமில் தமிழிசையை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கோபமடைந்த தமிழிசை ‘என்னை அசிங்கமாக பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என பொங்கினார். இந்நிலையில்தான், இன்று, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில் தமிழிசை கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் தமிழிசையிடம் அமித்ஷா மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசியதையே அவர் கண்டித்ததாக கருதப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து ‘ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவதுதான் பாஜகவின் வேலை. பாஜகவிலிருந்து தமிழிசை சவுந்தர்ராஜன் விலக வேண்டும்’ என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு, அமித்ஷா நடந்து கொண்ட விதத்தை பலரும் திட்டி வருகிறார்கள்.