Connect with us

india

புதிய சட்டங்கள் மக்களைக் குழப்புகின்றன… மத்திய அரசுக்கு குட்டுவைத்த நீதிமன்றம்!

Published

on

புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த சட்டங்களுக்குப் பல்வேறு மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தநிலையில், புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், `நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்ததால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 150 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் எந்தவொரு விவாதமும் செய்யாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் சில பிரிவுகளை மாற்றம் செய்தும் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசைத் தூண்டியது எது? என்ன காரணம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிமன்றத்தை சிரமத்திலும் மக்களை குழப்பத்திலும் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களில் சில திருத்தங்களை கொண்டு வந்திருக்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம்,புதிய சட்டம் கொண்டு வருவதற்கு முன், குறைந்தபட்சம் சட்டக் கமிஷனின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். பொதுவாக, கொள்கை அளவிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு கூட சட்டக் கமிஷனின் கருத்துக்கள் கேட்கப்படும்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சட்டக் கமிஷனின் கருத்துக்கள் கேட்கப்பட்டன, ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்ததோடு, புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

google news