Connect with us

Cricket

இது வெர்ஷன் 2.0 – டி20 உலக சாதனையை சமன் செய்த நிகோலஸ் பூரன்!

Published

on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்து உலக சாதனையை சமன் செய்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன்.

டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன. இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான லீக் போட்டி கிராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் பிரண்டன் கிங் விக்கெட்டை இழந்தது. ஆனால், அடுத்துவந்த நிகோலஸ் பூரன் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். குறிப்பாக அஸ்மத்துல்லா ஒமர்சாய் வீசிய நான்காவது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை பூரன் விளாச, லெக் பையாக ஒரு பவுண்டரி மற்றும் வொய்ட் கணக்கில் ஒரு பவுண்டரி, ஒரு நோபால் என 36 ரன்கள் கிடைத்தது.

இதன்மூலம், டி20 வரலாற்றில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்கிற யுவராஜ் சிங் சாதனையை நிகோலஸ் பூரன் சமன் செய்தார். அவர் 53 பந்துகளில் 98 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.

219 ரன்கள் என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், முதல் ஓவரிலேயே குர்பாஸின் விக்கெட்டை இழந்தது. 7-வது ஓவரில் ஒரு விக்கெட், 8-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான், இறுதிவரை அந்த இழப்பிலிருந்து மீளவே இல்லை.

முடிவில் 16.2 ஓவர்களில் 114 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம், 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்துவீச்சாளர்களான அகில் ஹூசைன் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

google news