latest news
போதை இல்லா தமிழகம்… மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு – போலீஸார் குவிப்பு
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ள நிலையில், போதைக் கலாசாரத்துக்கு எதிரான குரல் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனப்போக்குக்கு எதிராகவும் போலீஸாரின் அலட்சியத்துக்கும் அரசியல் கட்சிகள் தொடங்கி பொதுமக்களின் தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும் தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பு வைரலாகி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை மணலிலும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் நடத்தும் வகையில் கூட்டம் கூடினால், அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.