latest news
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு – பின்னணி!
தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் கேட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நாளை முதல் அத்தகைய பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் கடுமை காட்டியிருக்கிறது.
வெளிமாநில பதிவெண்
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பதாக அவ்வப்போது புகாரும் எழுந்து அடங்குவதுண்டு. அதேநேரம், தமிழகத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத்தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை பல ஆண்டுகளாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா தொடங்கி நாகாலாந்து, அசாம் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் கணிசமாக தமிழ்நாட்டில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவு செய்ய போக்குவரத்து ஆணையரகம் 6 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்தது.
இந்த அவகாசம் இன்றோடு (ஜூன் 13) முடியும் நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகளோடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவு செய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.