india
ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..
எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.
அதிலும், ரீல்ஸ் என சொல்லப்படும் சில நொடி அல்லது 2 நிமிட வீடியோக்களை எடுத்து அதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார்கள். நடிப்பது, நடனமாடுவது, சினிமா வசனம் பேசி நடிப்பது அல்லது தானே ஒரு கான்செப்ட்டை உருவாக்கி வீடியோக்களை வெளியிடுவது என இதே வேலையாக இருக்கிறார்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. வாலிபர்கள் பலர் ரீல்ஸ் மோகத்திலும், அதிக லைக்குகளை பெற வேண்டும் என்கிற எண்ணத்திலும் உயிரை பணயம் வைத்து செய்யும் விஷயங்கள்தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. சமீபத்தில் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து ஒரு இளம்பெண் கீழே தொங்குவது போலவும், அவரை இளைஞர் ஒருவர் கையை பிடித்து மேலே தூக்குவது போலவும் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியானது.
இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதால் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் புனேவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.