Cricket
இது தான் காரணம்.. இந்திய அணி தோல்விக்கு பின் மனம்திறந்த ராகுல் டிராவிட்..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து அணி தேர்வு குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணி தோல்வியுற்றதற்கு வசைபாடி வருகின்றனர். இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அணி தோல்வியடைந்தது பற்றி இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“நமது வீரர்களை டெஸ்டிங் செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பு, நம் வீரர்களில் சிலர் காயமுற்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்கள் துவங்க இருக்கும் நிலையில், பல்வேறு வழிகளில் நமக்கு நேரம் அதிகளவில் இல்லை. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு சில வீரர்கள் தயாராகிவிடுவர் என்று நம்புகிறோம்.”
“ஆனால், எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடாது, நம் வீரர்களிடையே முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது, மோசமான சமயங்களில் அவர்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும். நாம் எப்போதும் பெரிய விஷயங்களை எதிர்நோக்கியே செயல்படுவோம், ஒவ்வொரு போட்டி மற்றும் சீரிசில் கவனம் செலுத்த முடியாது.”
“உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களுக்கு இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளே எஞ்சி இருக்கும் இதுபோன்ற சீரிஸ்களில், விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா போன்ற வீரர்களை விளையாட வைப்பதில் எந்த முடிவும் கிடைத்திருக்காது.”
“மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளால் நாங்கள் வருத்தம் அடைய முடியாது. நம் வீரர்கள் அனைவரும் திறமமை கொண்டவர்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது அவர்களின் கையில் தான் உள்ளது.”
“அணியை பொருத்தவரை சற்றே ஏமாற்றம் அடைந்து இருக்கிறது. ஆடுகளம் சிக்கலான ஒன்று, பேட்டிங் செய்வது எளிமையான காரியம் இல்லை என்று நன்றாகவே தெரியும், ஆனால் எப்படியாவது 230 முதல் 240 ரன்கள் வரை எடுத்திருந்தால், நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும். போட்டி நடுவே விக்கெட்களை இழந்துவிட்டோம். மேலும் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டோம்.”
“சூரியகுமார் யாதவ் சிறப்பான வீரர் தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் அதனை தனது ஆட்டங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக, அவரின் டி20 தரத்துக்கு இணையாக அவரது ஒருநாள் ஆட்டம் இல்லை என்பதை அவர்தான் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டு வருகிறார். அவர் நல்ல வீரர், அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அதன்பிறகு அதனை எடுத்துக் கொள்வது அவரிடம் தான் உள்ளது,”
“இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் போதெல்லாம், அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். இதையே மற்ற இளம் வீரர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்தார்.