india
ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் மரணம்!. விபத்துக்கான காரணம் இதுதான்!..
சில சமயம் ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் உயிர் பலி ஏற்படும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும். தற்போது உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு ஆன்மிக சொற்பொழிவில் பலரும் இறந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு 2 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து எப்படி நடந்தது என அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள். அதில் பலரும் பாபாவின் காலடி மண்னை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட இட நெருக்கடியால் ஒருவர் மேல் ஒருவர் ஏறி பலரும் இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது பெரும் சோகமாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.