Cricket
அப்போ விராட் கோலி இதைத் தான் சொன்னார்.. தியோதர் கோப்பை தொடர் நாயகன் ரியான் பராக்..!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தியோதர் கோப்பை தொடரில் ரியான் பராக் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், மயாங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு ஜோன் கோப்பையை வென்றது. கிழக்கு ஜோனை சேர்ந்த ஆல்-ரவுன்டர் ரியான் பராக் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த தொடரில் அதிக ரன்களை சேர்த்தது, அதிக சிக்சர்களை அடித்தது மற்றும் அதிக விக்கெட்களை கைப்பற்றியது என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.
இந்த தொடரின் மூலம் அவர் லிஸ்ட் ஏ பிரிவில் ஐந்து சதங்களை பதிவு செய்திருக்கிறார். இதில் வடக்கு ஜோனுக்கு எதிரான ஆட்டத்தில் 102 பந்துகளில் 131 ரன்களும், மேற்கு ஜோனிற்கு எதிராக 68 பந்துகளில் 102 ரன்களும் அடங்கும். இதே தொடரில் மூன்றாவது சதத்தை கன நொடியில் தவறவிட்டார். இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 95 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
2023 ஐ.பி.எல். தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்ட சில மாதங்களில் ரியான் பராக் இத்தகைய ஃபார்முக்கு வந்துள்ளார். மோசமான ஃபார்மில் இருந்த ரியான் பராக், விராட் கோலியிடம் பேசிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் ரியான் பராக் தற்போது விராட் கோலியின் புகைப்படத்தை தனது ப்ரோஃபைல் படமாக வைத்திருக்கிறார்.
தியோதர் கோப்பை தொடருக்கு பிறகு, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரியான் பராக், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“உண்மையில் என்ன பேசிக் கொண்டோம் என்பதை அப்படியே சொல்லிவிட முடியாது. பல மாதங்கள் கடுமையாக உழைத்த உழைப்பு சில தோல்விகளால் தவறாகிவிட முடியாது. ஐ.பி.எல். தொடரில் இது போன்ற சம்பவங்கள் சகஜம் தான். இந்த தொடர் அதிவேகமாக நடந்து முடிந்து விடுவதால், இரண்டு போட்டிகளில் சொதப்பியதும், இது போன்ற கேள்வியை உன்னிடம் கேட்க தொடங்குகிறாய். எல்லோரும் தவறு செய்வார்கள், நான் ஏராளமான தவறுகளை செய்திருக்கிறேன். இரண்டு, மூன்று போட்டிகள் நமக்கு சாதகமாக அமையாது, உடனே நமது வழக்கமான பானியை மாற்ற நினைக்க கூடாது.”
“கள நிலவரத்தை புரிந்து கொண்டு, இது மோசமான காலம் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நமக்கு சரிப்பட்டு வந்த பானியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகாது. நான் சீவிங் கம் மெல்வதில் பலருக்கு பிரச்சினை உள்ளது. எனது காலர் மேலே எழும்பி இருந்தால், அதையும் குறை கூறுவார்கள். ஒரு கேட்ச் பிடித்ததும், நான் ஆக்ரோஷமாக கொண்டாடுவேன், அதையும் பிரச்சினை ஆக்குவார்கள். எனது ஓய்வு காலத்தில் நான் கொல்ஃப் விளையாடுவதும் அவர்களுக்கு பிரச்சினை தான்.”
“மக்கள் ஏன் என்னை வெறுக்கின்றார்கள் என்று எனக்கொரு புரிதல் உள்ளது. கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்ற விதி புத்தகம் ஒன்று இருக்கிறது. டி ஷர்ட் டக்-இன் செய்யப்பட்டு இருக்க வேண்டும், காலர் கீழே இருக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். யாரையும் வம்பிழுக்கக் கூடாது. ஆனால் நான் இவை அனைத்திற்கும் எதிரானவன்,” என்று என்னிடம் தெரிவித்தார்.