latest news
68 கொள்ளைகள்; 1,500 சவரன் நகை – ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்!
தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 68 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையன் ராடுமேன் மூர்த்தி என்பவனை கோவை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராடுமேன் மூர்த்தி என்பவன், தனது நண்பர்கள், உறவினர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். சிசிடிவி, நாய் தொல்லை இவற்றிலிருந்து தப்ப இந்த கும்பல் ரயில்வே டிராக்குகளில் நடந்துபோய் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இப்படியான 68 கொள்ளை சம்பவங்களில் இதுவரை 1,500 சவரன் நகைகளை இவர்கள் கொள்ளையடித்திருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார். இந்தக் கும்பலைப் பிடிக்க கோவை, விருதுநகர் மாவட்டங்களில் போலீஸார் தனிப்படை அமைத்திருந்தனர். குறிப்பாக, ராடுமேன் மூர்த்தி கும்பல் கோவை மாவட்டத்தில் மட்டும் 378 சவரன் நகைகளைக் கொள்ளையடித்திருக்கிறது.
மேலும், கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் மூர்த்தி விருதுநகரில் 4 கோடி ரூபாய்க்கு ஒரு ஸ்பின்னிங் மில்லை வாங்கி நடத்தி வந்ததும், பேருந்து நிலையம் அருகிலேயே 53 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கியதையும் போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். கோவை தனிப்படை போலீஸார் மூர்த்தியையும் அவரது கூட்டாளி அம்சராஜையும் கைது செய்து நடத்திய விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. இதே கும்பலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவனை மதுரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.