Connect with us

Cricket

கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!

Published

on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் அறிவித்திருக்கிறார்கள்.

விராட் கோலி

தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. 2010-ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் கோலி, இதுவரை 6 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கிறார். 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பைய வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், டி20-யைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு இதுதான் முதல் உலகக்கோப்பை.

ஆட்டநாயகன் விருதுக்குப் பின் பேசிய கோலி, `இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். நாங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைதோமோ… அதை சாதித்திருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். விராட் கோலி, 125 சர்வதேச டி20 போட்டிகளில் 4,188 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தியா சார்பில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா

2007-ல் இந்தியா விளையாடிய முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் அறிமுகமான ரோஹித் ஷர்மா, டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ரன் ஸ்கோரர். முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு மொத்தமாக 9 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்கிற பெருமை கொண்டவர்.

இளம் வீரராக முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு, தற்போது கேப்டனாக இந்த உலகக்கோப்பை வென்றிருக்கிறார். 159 டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் உள்பட 4,231 ரன்கள் அடித்திருக்கிறார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, `இது என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி கூட…’ என்று விராட் கோலியைத் தொடர்ந்து ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடாத ரோஹித்தும் கோலியும் இந்த உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்தே, கடந்த ஜனவரி முதல்தான் டி20-களில் விளையாடத் தொடங்கினர். இந்தத் தொடருக்கு முன் ரோஹித் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்தான் இந்தியாவின் கேப்டன் என்பதில் கோச் டிராவிட் உறுதியாக இருந்தார். அவரின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி கோப்பையை பரிசளித்திருக்கிறார் ரோஹித்.

google news