india
பெற்றோர், குழந்தைகள், மாமியார் மாமனாருடன் நேரம் செலவிட ‘ஸ்பெஷல் ஹாலிடே’… அரசு அதிரடி அறிவிப்பு…!
பெற்றோர்கள், குழந்தைகள், மாமனார், மாமியார் ஆகியோரிடம் நேரம் செலவிடுவதற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.
அசாம் அரசு தனது ஊழியர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விடுமுறையில் ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் பெற்றோர்கள், மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புகளை பெற தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து முதல் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது “அசாம் முதல்வர் டாக்டர் ஹேமந்த விஷ்வா தலைமையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8-ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள், மாமனார், மாமியாருடன் நேரம் செலவிடுவதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுப்பு வயதான பெற்றோர் அல்லது மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களை மதிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த விடுப்பு தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி சத் பூஜை விடுமுறை , நவம்பர் 9ஆம் தேதி 2-வது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உடன் சேர்த்து சிறப்பு விடுமுறை பெறலாம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாமியார் மாமனார் இல்லாதவர்கள் இந்த தகுதியை பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.