Cricket
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
இலங்கை அணியின் கமிந்து மென்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக புதிய சாதனைகளை படைத்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து சாதனைகளை படைத்து வரும் கமிந்து மென்டிஸ் காலெ டெஸ்ட் கிரிக்கெட்டில் வைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராண இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கமிந்து மென்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 50-க்கும் அதிக ரன்களை அடித்த வீரராக கமிந்து மென்டிஸ் சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து, தொடர்ச்சியாக முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளின் அனைத்து இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை கமிந்து மென்டிஸ் படைத்துள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனை படைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஷௌத் ஷகீல் தான் விளையாடிய முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்திருந்தார். இதற்கும் முன்பு இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். இதே சாதனையை பெர்ட் ஸ்கட்லிஃப், சயித் அகமது மற்றும் பசில் பட்சர் ஆகியோரும் படைத்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரை முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை அடித்து இருந்தது. இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் 116 ரன்களை அடித்து அசத்தினார். தற்போது ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மென்டிஸ் முறையே 78 மற்றும் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சௌதி மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.