Cricket
இவங்க பிரச்சனை இதுதான்.. இந்திய வீரர்களை சாடிய சுனில் கவாஸ்கர், கபில் தேவ்..!
இந்திய கிரிக்கெட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன. 70-களில் இருந்த இந்திய கிரிக்கெட்-இன் தற்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிப் போயுள்ளது. பி.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிதி நிலைமை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. உலகின் விலை உயர்ந்த கிரிக்கெட் தொடராக இந்திய பிரீமியர் லீக் என்ற ஐ.பி.எல். இங்கு நடைபெற்று வருகிறது.
வீரர்களும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். அதிக வருவாய் கொடுக்கும் மத்திய ஒப்பந்தங்களில் துவங்கி, பல கோடிகளை அள்ளிக்கொடுக்கும் ஐ.பி.எல். தொடர் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருவாய் பலமடங்கு அதிகரித்து வருகிறது. அதிக பணக்காரர்களாக இருக்கும் போதிலும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் கபில் தேவ், முன்னேற்றத்துக்கு எப்போதும் இடம் உண்டு என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது..,
“வேறுபாடுகள் நிச்சயம் வந்து போதும், ஆனால் இந்த வீரர்கள் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளனர். இவர்களிடம் இருக்கும் குறை, அவர்கள் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பதில் தான் துவங்குகிறது. இதனை வேறு எப்படி சரியாக சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.”
“ஆனால் அவர்கள் அதிக நம்பிக்கையாக உள்ளனர். அவர்கள் யாரிடமும் எதையும் கேட்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அனுபவம் மிக்கவர்கள் உங்களுக்கு உதவ முடியும் என்று தான் நாங்கள் நினைக்கின்றோம். சில சமயங்களில் அதிக பணம் கிடைக்கும் போது, ஆணவம் ஏற்படும். இந்த கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கின்றனர். இது தான் வித்தியாசமே.”
“நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி வேண்டும் என்றே நான் கூறுவேன். சுனில் கவாஸ்கர் இருக்கும் போது, அவரிடம் ஏன் பேச கூடாது? எங்கிருந்து, நான் தான் என்ற அகங்காரம் வருகிறது? அகங்காரமே தேவையில்லை. நாம் சிறப்பானவர் தான் என்று அவர்கள் உணர்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்ற போதிலும், கிரிக்கெட்டில் 50 சீசன்களை பார்த்தவர்களிடம் இருந்து உதவி பெறுவது அவர்களுக்கு கூடுதல் பலன் அளிக்கலாம். சில சமயங்களில் அவற்றை கேட்டுக் கொள்வது உங்கள் மன நிலையை மாற்றலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவர், முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தன்னிடம் அறிவுரை கேட்க வருவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“யாரும் வந்ததில்லை. ராகுல் டிராவிட், சச்சின் டென்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷமன் தொடர்ச்சியாக என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்கள் ஏதேனும் பிரச்சனையுடன் வருவார்கள், அவர்களிடம் நாம் எதிர்கொண்ட அனுபவம் எதையேனும் கூறலாம். இவ்வாறு செய்வதில் எனக்கு அகங்காரம் இருந்ததே இல்லை, அவர்களிடம் நானாக சென்று பேச முடியும். ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். சில சமயங்களில் அவர்களிடம் பேசும் போது, அதிகப்படியான விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.