Cricket
T20 World Cup: அடுத்த ரிவெஞ்சுக்கு தயாராகும் இந்தியா! #INDVsENG
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணியும், பெரும் எழுச்சி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இது டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது.
அதேபோல், கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்க்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி பழிவாங்கியது.
இந்தநிலையில், 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்த அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.
அடிலெய்டு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்தியா நிர்ணயித்த இந்த இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுலின் முதல் அரசியலமைப்புப் பதவி.. எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் முக்கியத்துவம்!