latest news
மீண்டும் வருகிறது மினிபஸ் சேவை… தமிழ்நாடு அரசின் சூப்பர் பிளான்!
தமிழ்நாட்டில் மினி பஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், மினி பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் மினி பஸ் சேவைகளுக்கான அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
மினி பஸ் சேவைக்கான அனுமதி, எந்தெந்தத் தடங்களில் வழங்கலாம் என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்களே (ஆர்டிஓ) முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், 25 கி.மீ வரையில் அனுமதி அளிக்கப்படலாம் என்றும் இதில், 18 கி.மீ ஏற்கனவே பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும் 7 கி.மீ வழக்கமான பேருந்து சேவை வழித்தடத்திலும் அனுமதி வழங்கலாம். மேலும், இந்த பஸ்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் மினி பஸ் சேவை
சென்னையைப் பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஜூலை 14-ம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும், மினி பஸ் சேவை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டம் முடிந்து ஒரு சில மாதங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.