india
800க்கும் அதிகமான மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு… நடந்ததே வேற? விளக்கம் அளித்த அரசு…
திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதில் 47 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநிலமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது.
படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த நோய் குறித்து பிரச்னை பெரிய அளவில் பேசப்பட தொடங்கிய நிலையில் தற்போது திரிபுரா மாநில அரசு இத்தகவலுக்கு விளக்கம் அளித்து இருக்கிறது. எச்ஐவி என்னும் கொடுமையான தொற்று நோயால் 828 மாணவர்கள் பாதிக்கப்பட்டது என்னவோ உண்மை தான். அதில் 47 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுவதும் சரி. ஆனால் இது ஒருநாள் தரவு இல்லை.
2007ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளின் கணக்கு எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தொற்று நோய் 220 பள்ளிக்கூடங்கள் மற்றும் 24 கல்லூரிகள் மூலம் போதைப் பொருள் பயன்பாடு மூலமே பரவி இருக்கிறது.
சமீபத்தில், திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் (டிஎஸ்ஏசிஎஸ்) மூத்த அதிகாரி, எச்ஐவியால் 47 மாணவர்கள் இறந்துள்ளதாகவும், 828 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதை தொடர்ந்து செய்தி தவறாக பரவியது.
இதை தொடர்ந்தே திரிபுரா மாநில அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர். அவர்கள் இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரி நிறுவனங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த செய்தியின் தீவிரம் குறைந்துள்ளது.