latest news
பெண்ணுக்கு கத்திக்குத்து… சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில்… களேபரமாகும் விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முரமாக நடந்துவரும் வாக்குப்பதிவிற்கு இடையே சில சர்ச்சைகளும் உருவாகி இருக்கிறது.
இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டியை சுற்றி இருக்கும் டாஸ்மாக்குகள் நேற்று முதல் அடைக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், மது பிரியர்கள் கள்ள மார்க்கெட்டில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதில் 11 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உடல்நல பாதிப்பு குறித்து முதல் விசாரணையை காவல்துறை தொடங்கியிருக்கின்றது. அதே நேரத்தில் விக்கிரவாண்டி வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வந்த ஒரு பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்திருக்கிறது.
டி கொசபாளையம் வாக்கு மையத்தில் ஓட்டு போட நின்ற பெண்ணை ஒருவர் குத்தி விட்டு தப்பிக்க முயன்றார். அங்கு காவலில் இருந்த அதிகாரிகள் அந்த நபரை சுற்றி வளைத்து விசாரித்த நிலையில் அவர் பெண்ணின் முன்னாள் கணவர் என தெரிவித்தார். தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஓட்டு போட வைத்து வீட்டிற்கு அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 64.44% வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.