latest news
இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கு தயாராகும் விக்கிரவாண்டி – ஏற்பாடுகள் தீவிரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஜூலை 10) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் முடுக்கிவிட்டிருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலையோடு ஓய்ந்திருக்கும் நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பென்சில், பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
மேலும், விக்கிரவாண்டியில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளில் தங்கி பரப்புரை மேற்கொண்ட வெளியூர் நபர்கள், கட்சி பிரமுகர்கள் தொகுதியில் தங்க அனுமதி இல்லை எனவும் அவர்கள் உடனடியாக வெளியேறும்படியும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். மீறி, தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.