latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… நிறைவு பெற்ற வாக்குப்பதிவு… எத்தனை சதவீதம் வாக்குப் பதிவானது…?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி உடன் நிறைவடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாகி இருந்தது. அந்த தொகுதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் மூலமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் நடைபெற்றது.
ஆளும் கட்சியான திமுக சார்பில் அனியூர் சிவா, பாமக வேட்பாளர் ஸ்ரீ அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் தேர்தலில் நின்றனர், இதைத்தொடர்ந்து 26 பேர் சுயேசையாகவும் போட்டியிட்டனர். மொத்தமாக 29 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமாக சென்று வாக்களித்து வந்தார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மக்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளையும் வாக்கு சாவடியில் செய்யப்பட்டிருந்தது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு தற்போது 6 மணியளவில் நிறைவடைந்தது. 278 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டி இருந்தது.
அதில் 1.84 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். தற்போது வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்கு பதிவுகள் இந்த தொகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 13ஆம் தேதி எண்ணப்படும் என்றும், அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.