Cricket
58 ரன்கள் தான், 147 ஆண்டுகளில் முதல்முறை – கோலிக்கு காத்திருக்கும் சூப்பர் டிரீட்
இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு களமிறங்கும் டெஸ்ட் போட்டி தொடராக இது அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு பேசும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதே இதற்கு காரணம் ஆகும்.
அந்த வரிசையில், விராட் கோலி மற்றொரு உலக சாதனையை படைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த சாதனையை அவர் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரிலேயே படைப்பார் என்றும் தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் 591 இன்னிங்ஸில் மொத்தம் 26,942 ரன்களை அடித்துள்ளார்.
அதன்படி இன்னும் 58 ரன்களை மட்டும் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையோடு, குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க முடியும். வங்கதேசம் அணியுடன் இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ஒரு இன்னிங்ஸில் அரைசதம் கடந்தாலே விராட் கோலி இந்த சாதனையை படைத்துவிட முடியும்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனைய விராட் கோலி படைப்பார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கர் தவிர ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் குமார் சங்கக்காரா ஆகியோரும் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.