Connect with us

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் புது சாதனை… சச்சின், கவாஸ்கர், டிராவிட் வரிசையில் இணைந்த விராட் கோலி…!

Published

on

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை எடுத்து புது சாதனை பட்டியலில் இணைந்திருக்கின்றார் விராட் கோலி.

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இன்று நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் 46 ரன்கள் ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி 420 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதனால் இந்திய அணி டிரா செய்யப் போராடுமா என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து இருக்கின்றது. இந்நிலையில் இந்தியா அணியில் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி இன்று களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 42 ரன்கள் எடுத்திருந்தார்கள். இருவரும் இணைந்து 72 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியான ரன்களை குவித்தது. ரோகித் சர்மா அரை சதம் அடித்து வெளியேறினார். பின்னர் விராட் கோலி சர்பாஸ் கான் கூட்டணியுடன் இணைந்து ரண்களை குவிக்க தொடங்கினார்கள். இருவரும் சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளை அடித்து நொறுக்க இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக வளர்ந்தது.

அதிரடியாக விளையாடிய சர்பாஸ் 42 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அதைத்தொடர்ந்து விராட் கோலி 70 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் முதல் அரை சதம் இது. இதனைத் தொடர்ந்து மிகவும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 53 ரன்களை எட்டிய போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார்.

இதற்கு முன்பாக கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். 4-வது வீரராக விராட் கோலி இந்த பட்டியலில் இணைந்திருக்கின்றார். இருப்பினும் நான்கு பேரில் மிகவும் தாமதமாக 9000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை தான் அவர் படைத்திருக்கின்றார். அதாவது 9 ஆயிரம் ரன்களை அடிப்பதற்கு விராட் கோலிக்கு 197 இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

google news