Cricket
கையில் டம்பெலுடன் ஸ்குவாட்.. ஒரே வீடியோ.. இன்ஸ்டாவை அதகளம் செய்த கோலி
உலகளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டொமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், சதத்தை தவறவிட்ட போதிலும் விராட் கோலி ஃபார்ம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஒட்டி விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். புதிய வீடியோவில், விராட் கோலி தனது உடற்பயிற்சி வழக்கம் பற்றி பேசியிருக்கிறார்.
இதோடு கையில் டம்பெல் வைத்துக் கொண்டு ஸ்குவாட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது உடல் வலிமைக்கான உடற்பயிற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வைரல் வீடியோவில், “மொபிலிட்டி மற்றும் வலிமைக்கு, நான் செய்ய விரும்பும் உடற்பயிற்சி? கோப்லெட் ஸ்குவாட்கள்,” என்று தலைப்பிட்டுள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சீரிசில் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியில் விளையாடினார். இவர் 171 ரன்களை விளாசினார். ரவிசந்திரன் அஷ்வின் தன் பங்கிற்கு 12 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐ.சி.சி. பட்டியலின் படி இந்திய அணி முதல் டெஸ்ட் அணியாக விளங்குகிறது. வெஸ்ட் இன்டீஸ் அணியிடம் 2-0 என்ற அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்றாலும் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது.
ஐ.சி.சி. டெஸ்ட் அணிகள் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.