Connect with us

india

நிலமே அதிர்ந்தது; தூக்கி வீசப்பட்டோம் – மே.வங்க ரயில் விபத்தால் பதறிய பயணிகள்!

Published

on

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷீல்டாவிலிருந்து திரிபுராவின் அகர்தலா நகருக்கு இயக்கப்படும் ரயில்தான் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில். இந்த ரயில் ஷீல்டாவில் இருந்து புறப்பட்டு அகர்தலா நோக்கி சென்றுகொண்டிருந்தது. நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தைக் கடந்து 30 கி.மீ சென்ற நிலையில், தீடிரென பெரிய அதிர்வுகளோடு ரயில் நின்றிருக்கிறது.

பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது பின்னால் வந்த சரக்கு ரயில், விரைவு ரயிலின் மீது பெரும் சத்தத்தோடு மோதியிருப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக இயக்கியது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார். பாதுகாப்பான ரயில் பயணம் என்று ரயில்வே துறை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ளும் நிகழ்வு இது கடந்த மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நிகழ்ந்திருப்பது ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரயில் விபத்து குறித்து கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் கூறுகையில், திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டோம். உயிர் பிழைப்போமா என்றெல்லாம் ஒரு கட்டத்தில் அச்சம் ஏற்பட்டது என அந்த திக் திக் நிமிடங்களை விவரித்திருக்கிறார்கள். அதேபோல், விபத்து நடந்து நீண்ட நேரத்துக்குப் பிறகே மீட்புப் பணிகள் தொடங்கியதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட உளவுத்துறை துணை ஆய்வாளர்… சிக்கியது 5 பக்க கடிதம்…

google news