Cricket
T20 World Cup: இந்தியா – ஆஸ்திரேலியா மேட்ச் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 1-ல் இருந்து அரையிறுதிக்குப் போகும் அணிகள் எவை என்கிற கேள்விக்கான விடை கடைசி 2 போட்டிகளின் முடிவைப் பொறுத்து அமையும். குறிப்பாக நான்கு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பைக் குறிவைத்திருக்கின்றன.
வெற்றி – தோல்வி, நெட் ரன் ரேட் என இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என்பதை முடிவு செய்யும் முக்கியமான காரணியாக வானிலையும் இருக்கிறது என்பதுதான் களநிலவரமாக இருக்கிறது. முக்கியமான கடைசி இரண்டு போட்டிகளில் செயிண்ட் லூசியாவில் நடக்கும் முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் நேரம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷ் அவுட் ஆனால் என்ன நடக்கும்?
ஒருவேளை இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், இந்திய அணிக்கு அது சாதகமாகவே இருக்கும். இரண்டாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதும். ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகளுடன் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் போட்டி முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.
அந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும். ஒருவேளை, அந்தப் போட்டியும் வாஷ் அவுட் ஆனால் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் தலா 3 புள்ளிகளுடன் இருக்கும். ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும்.