Cricket
World Championship: யுவராஜ், பதான் பிரதர்ஸ் மேஜிக்- ஃபைனலில் பாகிஸ்தானை எதிர்க்கொள்ளும் இந்திய சாம்பியன்ஸ்!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய சாம்பியன்ஸ் அணி, ஃபைனலில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது.
ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதன், முதல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இதையடுத்து, நார்தாம்ப்டனில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையில் இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் உத்தப்பா 65 ரன்கள் எடுத்தார்.
ராயுடு, ரெய்னா ஏமாற்றினாலும் அடுத்துவந்த கேப்டன் யுவராஜ் சிங், யூசுப் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் அரைசதங்கள் அடித்து அசத்தினர். இதில் யுவராஜூம் இர்ஃபான் பதானும் 5 சிக்ஸர்கள் அடிக்க யூசுப் பதான் 4 சிக்ஸர்கள் விளாசினார்.
255 என்கிற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. டிம் பெய்ன் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுக்க, அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா சாம்பியன்ஸ் அணி, இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.