Connect with us

Cricket

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

Published

on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் அரங்கேறிய அநீதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டதோடு, இந்திய கேப்டன், தலைமை பயிற்சியாளர் மூன்றாம் நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு கைமீறி சென்றது. நேற்றைய போட்டியின் போது நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார்.

அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார். தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார்.

அம்பயரின் இந்த செயலைக் கண்டு கோபமுற்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறுப்பக்கம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அமுல் மஸ்முதார் மூன்றாம் நடுவரிடம் இந்த சம்பவம் குறித்த பேசத்துவங்கினார். இவரோடு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு, மீண்டும் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. அடுத்து பேட் செய்ய வந்த இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சர்ச்சையில் சிக்கியது, தோல்வியை தழுவியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

google news