india
ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.
அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.