health tips
கொல்லாம்பழம்… முந்திரிப்பழம், கப்பல் வித்தான் கொட்டை… இதை சாப்பிட்டா உங்களுக்கு சூப்பர் எனர்ஜி..!
கொல்லாம்பழத்துக்கு மற்றொரு பெயர் முந்திரிப்பழம். இது பிரேசிலில் இருந்து வந்த பழம். இந்தியாவில் கோவா கடற்கரையில் தான் முதலில் பயிரிட்டனர். கடல் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
இதன் பருப்பு மிகவும் சுவையாக இருக்கும். முந்திரி பருப்பின் சுவைக்கு மயங்கிய வெளிநாட்டவர்கள் தங்களது கப்பலையே விற்று இதை வாங்கி சாப்பிடுவார்களாம். அதனால் முந்திரி பருப்புக்கு கப்பல் வித்தான் கொட்டை என்றும் ஒரு பெயர் உண்டு.
மற்றப் பழங்களையும் விட முந்திரிப்பழம் மிகவும் வித்தியாசமானது. எல்லாப் பழங்களிலும் விதையானது பழத்தின் உள்ளே தான் இருக்கும். ஆனால் கொல்லாம்பழத்தில் அதாங்க…
முந்திரிப்பழத்தில் விதையானது பழத்திற்கு வெளியே எட்டிப் பார்க்கும். அதனால் தான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்தாதேன்னு நம்ம பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.
அது சரி. இந்த முந்திரிப்பருப்பை நாம் பாயாசத்திற்குப் போடுவதைப் பார்த்திருப்போம். வெறும் வாயிலேயும் சாப்பிடலாம். நல்லா டேஸ்டா இருக்கும்.
ஆனால் முந்திரிப்பழம்… அதாங்க… கொல்லாம்பழம்… இதை சாப்பிட்டா உங்கள் முகம் வேறு மாதிரி போகும். முதலில் இனிப்பு சுவையுடன் சேர்ந்து காறல் சுவையும் அதாவது கார்ப்பு சுவையும் தென்படும். இது நமக்கு புதுசாக இருப்பதால் இஷ்டப்பட்டு அந்த கஷ்டத்தை அனுபவிப்போம்.
இப்போது இந்தக் கொல்லாம்பழம் சீசன் வந்துவிட்டது. தேரிக்காடுகளில் இது அதிகம் விளையும். இதன் மரத்தைப் பார்த்தால் பச்சைப் பசேல் என்று தலைகீழாகக் குடையைக் கவிழ்த்து வைத்தாற்போல காணப்படும். உவரி, தேரிக்குடியிருப்பு, சோனகன்விளை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய செம்மண் பகுதிகளில் இந்த மரங்கள் காணப்படும்.
முந்திரிப்பருப்பின் சுவைக்கு என்ன காரணம்னு தெரியுமா? அதோட பழத்தில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள் தான். பழம் சாப்பிடுகையில் தொண்டையில் கிச் கிச் மூட்டும்.
இது வராமல் இருக்க என்ன செய்வது? சுலபம் தான். பழத்தை நீராவியில் கொஞ்ச நேரம் வைங்க. அல்லது உப்பு கலந்த தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊற வைங்க. அப்புறம் சாப்பிடுங்கள். தொண்டை கரகரப்பும் வராது. ஒன்றும் வராது.
தாமச குணத்தைத் தரும் பழங்களில் இதுவும் ஒன்று. பனம்பழம், சீத்தாப்பழம், முந்திரிப்பழம் ஆகியவை தான் தாமச குணத்தைத் தருபவை என்கின்றனர் சித்தர்கள்.
வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
நீரிழிவு நோய்க்கு இது ஒரு அருமருந்து. ரத்த அழுத்தத்தைச் சரிசெய்வதில் இது ஒரு சூரப்புலி.
அதுமட்டுமா, சிறந்த கிருமி நாசினி. பற்கள், நகங்களுக்கு உறுதியைத் தருகிறது. முந்திரிப்பழத்தில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துக்கள் உள்ளன. டானின் என்ற வேதிப்பொருள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.
முந்திரிப்பருப்புக்கு அண்டிப்பருப்பு என்றும் ஒரு பெயர் உண்டு. அது ஏன் வந்தது? பழத்தின் அடியில் கொட்டை இருப்பதால் அண்டிப்பருப்பு என்ற பெயர் வந்தது. பிரேசிலில் முந்திரிப்பழ ஜூஸ் ரொம்பவே பிரபலம். கயானாவில் முந்திரி எண்ணையைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். ஸ்கர்வி நோயைத் தடுக்கிறது.