சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி முன்னெடுப்பை எடுத்துள்ளார். காசா போரை நிறுத்தவும், உலக அமைதியை நிலைநாட்டவும் ‘அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற புதிய அமைப்பை அவர் தொடங்கி வைத்தார்.
உறுப்பினர்களான 19 நாடுகள்:
இந்தத் தொடக்க விழாவில் சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 19 நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுப்பினர்களாக இணைந்தன. குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இந்த அமைப்பில் இணைந்ததை பெருமையுடன் அறிவித்தார்.
ஒதுங்கி நின்ற இந்தியா, சீனா:
இருப்பினும், இந்த ‘அமைதி வாரியம்’ பல முக்கிய நாடுகளின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகள் இந்த வாரியத்தில் இணைவதைத் தவிர்த்துவிட்டன. அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இத்தகைய அமைப்புகளை உருவாக்குவதாக இந்த நாடுகள் கருதுவதே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் உலக நாடுகளைத் தனது தலைமையின் கீழ் கொண்டுவரத் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த அமைதி வாரியம் பார்க்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆர்வமுடன் இணைந்திருப்பது ஆசிய அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.