நாம இன்னைக்கு இங்கிலீஷ்ல கம்பர்ட்டபிளா பேசுறதுக்குக் காரணமே அறிஞர் அண்ணாவும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் தான் என்று கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் பெலவாடி பேசிய பழைய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படத்தில், அன்றைய முதல்வர் பக்தவச்சலமாக நடித்து மிரட்டியிருக்கும் பிரகாஷ் பெலவாடி, ஒரு நேர்காணலில் தமிழ்நாட்டின் மொழிப்போர் குறித்துப் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்ணா என்ற ஆகச்சிறந்த தலைமை:
அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது, “நீங்களும் நானும் இப்போ ஆங்கிலத்துல பேசிட்டு இருக்கோம். இது இந்தியா முழுக்க எல்லாருக்கும் புரியுது. இதற்கு முக்கிய காரணம் 1960-களில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு எடுத்த அந்த உறுதியான முடிவுதான். அப்போது அண்ணா ஒரு ஆகச்சிறந்த தலைவராக இருந்தார். அவர்கள் மட்டும் போராடாமல் இருந்திருந்தால், இந்தத் தேசத்தில் ஆங்கிலமே இருந்திருக்காது.”
ஆங்கிலம் இல்லையென்றால் இந்தியாவின் தலைவிதி?
தொடர்ந்து பேசிய அவர், “ஆங்கிலம் இல்லையென்றால் இந்தியாவின் தலைவிதியைச் சற்று யோசித்துப் பாருங்கள். உலகத்தோடு நம்மால் தொடர்பில் இருந்திருக்க முடியுமா? தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இந்தியா இவ்வளவு சாதித்திருக்க முடியுமா? இந்தியா இன்று ஒரே நாடாக இருப்பதற்கே அந்தப் போராட்டம் தான் அடிப்படை. ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் போராடிய தமிழ்நாட்டுக்கும், அண்ணாவுக்கும் இந்தியா பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
திரையிலும் நிஜத்திலும்:
‘பராசக்தி’ படத்தில் இந்தி திணிப்புக்கு ஆதரவான ஒரு அதிகார மையமாக நடித்திருக்கும் பிரகாஷ் பெலவாடி, நிஜ வாழ்க்கையில் தமிழ்நாட்டின் போராட்டத்தைப் பாராட்டுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பு குறித்த விவாதங்கள் அவ்வப்போது கிளம்பும் நிலையில், ஒரு கன்னட நடிகரான அவர், தமிழ்நாட்டின் பங்களிப்பை இவ்வளவு வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.