கணவரிடம் பணம் கறக்க நாடகம்.. பொய் சொல்லி ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு ‘செக்’!

விவாகரத்து வழக்கில், தான் வேலையில்லாதவர் என்று கூறி கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரிய மனைவி, உண்மையில் நன்கு படித்து, சுயமாக சம்பாதிப்பது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் ஜீவனாம்சம் கோரும் பெண்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை நீதிமன்றம் விடுத்துள்ளது.

படிக்காதவர் எனப் பொய் சொன்ன மனைவி:

அங்கித் சாஹா (Ankit Saha) என்ற நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வந்தது. விவாகரத்துக்குப் பிறகு, அவரது மனைவி கீழமை நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்குப் போதிய படிப்பு இல்லை, வேலையும் இல்லை, எனவே தன் அன்றாடச் செலவுகளுக்கு கணவர் மாதம் ₹5,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதையடுத்து, குடும்பநல நீதிமன்றம் கணவர் அங்கித் சாஹா மாதம் ₹5,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அங்கித் சாஹா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

டிசைனர் வேலை பார்த்தது அம்பலம்:

வழக்கு நீதிபதி மதன் பால் சிங் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அங்கித் சாஹா தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த ஆவணங்களில், அவரது மனைவி முதுகலை பட்டம் (Post Graduate) படித்தவர் என்பதும், அதை மறைத்துவிட்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வெப் டிசைனராக வேலை பார்க்கிறார், அதிலிருந்து போதுமான வருமானம் ஈட்டுகிறார் என்ற உண்மையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு:

சுயமாகச் சம்பாதிக்கும் பெண், வேண்டுமென்றே தனது கல்வித் தகுதியையும், வேலையையும் மறைத்து, கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கூறி, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த ஜீவனாம்ச உத்தரவை நீதிபதி மதன் பால் சிங் ரத்து செய்தார்.

“ஒரு பெண் சுய வருமானம் ஈட்டும் திறன் பெற்றவராக இருந்தால், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கில் மனைவி தனது உண்மை நிலையை மறைத்துள்ளார்” என்று நீதிபதி கருத்து தெரிவித்ததுடன், அங்கித் சாஹாவுக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளார்.

உண்மையைக் குறைத்து மதிப்பிட்டு ஜீவனாம்சம் கோரும் பெண்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியப் பாடமாக அமைந்துள்ளது.

Leave a Comment