தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‘தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்’ என்ற அரசியல் எழுச்சி யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று (ஜனவரி 4, 2026) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
இந்தியா கூட்டணிக்கு முடிவுரை!
மேடையில் உரையாற்றிய அமித்ஷா, பீகார் மற்றும் பிற மாநிலங்களில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி தோல்வியைத் தழுவியதைச் சுட்டிக்காட்டினார். “பீகாரில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஏற்கனவே முடிவுரை எழுதிவிட்டனர். அங்கிருந்த குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது எங்களது முழுக் கவனமும் தமிழ்நாட்டின் மீது திரும்பியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி:
தமிழகத்தில் மீண்டும் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அமைப்பதற்கான செய்கையை அமித்ஷா வெளிப்படுத்தினார். “பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி ஒரு இயல்பான கூட்டணி. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும்” என்று அவர் உறுதியளித்தார்.
திமுக மீது சரமாரி தாக்குதல்:
“நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. தமிழக அரசு 20 சதவீத கமிஷன் அரசாங்கமாகச் செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே நோக்கம் உதயநிதியை முதலமைச்சராக்குவதுதான். ஆனால், தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டனர்.”
பாதுகாப்பு: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, குறிப்பாகப் பெண்கள் மற்றும் மகள்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று அவர் சாடினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா கொடுத்த வாக்குறுதி:
“தமிழகத்தின் புனித மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். மகத்தான தமிழ் மொழியில் உங்களோடு உரையாட முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால், தமிழகத்தை வளர்ச்சியின் பாதைக்குக் கொண்டு செல்லவும், ஊழலற்ற ஆட்சியைத் தரவும் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.