ராக்கெட் வேகத்தில் தங்கம்.. தப்பிக்க ஒரு வழி இருக்கு!.. ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ‘ஒரே ஒரு’ மேட்டர்!

நடுத்தர வர்க்கத்தினரின் ஆகச்சிறந்த சேமிப்பான தங்கம், இப்போது எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டு ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துள்ளது. தற்போது 24 கேரட் தங்கம், ஸ்டாம்பிங் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி (GST) என அனைத்தையும் சேர்த்தால் ஒரு கிராம் ரூ.15,000-ஐ கடந்து விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராக்கெட்டாய் ஏறும் தங்கம்!
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் போர்ப்பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதன் விளைவாக இந்தியாவில் தங்கம் விலை கட்டுக்கடங்காமல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் எங்கே லட்சத்தைத் தொட்டுவிடுமோ என்ற அச்சம் நடுத்தர குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன் சொன்ன ‘அந்த’ ஒரு வழி!
இது குறித்து பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

தங்கம் விலை குறைய வேண்டும் என்றால் மத்திய அரசு உடனடியாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை (Import Duty) குறைக்க வேண்டும்.

தங்கம் விலை இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அரசு வரியைக் குறைத்தால் மட்டுமே விலையில் அதிரடி சரிவு ஏற்படும்.

இப்போதே ஒரு கிராம் 15 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இது மட்டும் குறையவில்லை என்றால், தங்கம் வாங்குவது நடுத்தர மக்களுக்குப் பகல் கனவாகவே மாறிவிடும்.

பொதுமக்கள் கவலை!
திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கக் காத்திருக்கும் குடும்பங்கள், இந்த விலையேற்றத்தைக் கண்டு கையைப் பிசைந்து நிற்கின்றனர். “நாளுக்கு நாள் விலை இப்படி எகிறினால் எப்படி நகை வாங்குவது?” என்பதே அவர்களின் குமுறலாக உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறித்த அறிவிப்பு வருமா? அல்லது தங்கம் விலை சாமானியர்களுக்கு எட்டாத உயரத்தில் அமர்ந்து கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment